பாதை வெகு தூரமில்லை

எத்தனை நாள் தான் இழுப்பது விடிவு மட்டும் வந்தபாடில்லை எத்தனை நாள் தான் அழுவது கண்ணீர் மட்டும் வரண்டபாடில்லை
எத்தனை முறைதான் போராடுவது விடுதலை மட்டும் கிடைத்தபாடில்லை 

எங்கே நாம் பிழை விட்டோம் எண்ணி பார் தோழனே வீரம் மட்டுமே விடுதலையை வென்று விடாது 
விவேகமும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் முற்போக்கு சிந்தனையும் தான் நமக்கான விடியலின் பாதை 
அந்த Image

Advertisements
By தமிழக மீனவர்கள் Posted in Uncategorized

மீனவர் உரிமை பாதுகாக்க சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வழக்கு

மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பெற, எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, உத்தர
விடப்பட்டு உள்ளது.
நிபுணர் குழு
மீனவ அமைப்பின் தலைவர், பீட்டர் ராயன் என்பவர், தாக்கல் செய்த மனு:
மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில், நான்கு உறுப்பினர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, அரசுக்கு அறிக்கை அளித்தது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் தொடர்பான அறிவிப்பாணை, 2011ல், வெளிவந்தது. இது, மீனவர்களின் வாழ்வாதாரம், உரிமைகளை பாதுகாக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, மேம்பாட்டு பணிக்கான, கடற்கரை பரப்பு பகுதியை, 200 மீட்டரில் இருந்து, 100
மீட்டராக குறைக்கப்பட்டது.
இருந்தாலும், ‘மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக, தனியாக சட்டம் இயற்ற வேண்டும்’ என, அரசுக்கு, குழு பரிந்துரைத்தது. தனி சட்டம் தொடர்பான பரிந்துரை, இன்னும் நிலுவையில் உள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாருக்கு, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில், ‘மீனவர்
களின் உரிமைகள், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, எந்த அமைச்சகம், சட்டத்தை வரைவு செய்ய வேண்டும்?’ என,
கேட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு முறையீடு
இதற்கு, மத்திய அரசு இதுவரை, நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தின் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு முறையீடு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை.
எனவே, மீனவர் உரிமைகளை பாதுகாக்க, எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி
அகர்வால், நீதிபதி சத்திய
நாராயணன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, ஜன., 8ம் தேதிக்கு, தள்ளி வைத்தது.

By தமிழக மீனவர்கள் Posted in Uncategorized

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

ராமேசுவரம் பகுதியிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை 674 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தங்கச்சிமடம் வலசைத்தெரு அம்புரோஸ் மகன் டக்ளஸின் படகில் சென்ற மூக்காண்டி, ஆறுமுகம், மாரிமுத்து, ஜஸ்டின், மற்றும் மூர்த்தி ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால் கடல் அலைகள் திடீரென அதிக வேகமாக வந்து படகில் மோதின. அச்சமயத்தில் படகில் இருந்த மீனவர் மூர்த்தி தவறி கடலில் விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி விட்டார். இதனால் படகில் இருந்த மற்றவர்கள் மூழ்கிய மீனவர் மூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் சோகத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை ராமேசுவரம் திரும்பினர்.

கடலில் மூழ்கிய மீனவர் மூர்த்தி ராமேசுவரம் டி.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

By தமிழக மீனவர்கள் Posted in Uncategorized

50 சதவீத மானியத்தில் மீனவர்களுக்கு வலை

விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் செய்து வரும் உள்நாட்டு மீனவர்களுக்கு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2013-14-ம் ஆண்டுக்கு மீன்வளத் துறையின் மூலம் நைலான் மீன் பிடி வலைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த வலைகள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. ஒரு யூனிட் அளவு 20 கிலோ கிராம் வலை ரூ.15,000 ஆகும். இதில் 50 சதவீதமான ரூ.7,500, மானியமாக வழங்கப்படும்.
÷இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மீனவர்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை விழுப்புரம், விஸ்வலிங்க ஆச்சாரி லே அவுட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

ஓட்டு சீட்டு வேட்பாளர்களின் எண் மாற்றம்: மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் திடீர் ஒத்திவைப்பு

பரங்கிப்பேட்டை: அகரம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்கள், ஓட்டுச் சீட்டில் மாற்றப்பட்டதற்கு வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் வரும், 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில், மீனவர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்திற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள், 7 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த, 9ம் தேதி, தேர்தல் அலுவலர் எட்வின்ராஜ் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஆரியநாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த, கனகசபை தரப்பில், 7 பேரும், சின்னையன் தலைமையில், 7 பேர் என மொத்தம், 14 பேர் மனு தாக்கல் செய்தனர். மறுநாள் எவரும் மனு வாபஸ் பெறாததால் அன்று மாலை, 14 பேரும் வேட்பாளர்களாக அறிவித்து, ஒவ்வொருவருக்கும் தனி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில், அனைவரும் கடந்த ஒரு வாரமாக தங்களது ஆதரவாளரை சந்தித்து ஆதரவு திரட்டினர். இதற்கான ஓட்டுப்பதிவு நேற்று, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரில் உள்ள, மீன்வளத் துறை பயிற்சி மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் நேற்று காலை, 7:00 மணிக்கே ஓட்டு போட ஆர்வமாக ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த மாதிரி ஓட்டுச் சீட்டில், வேட்பாளர்களுக்கான எண் மாறியிருந்தது. மேலும், வேட்பாளர் முருகேசன் என்ற பெயருக்கு முருகன் என, குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு ஆவேசமடைந்த சின்னையன் தரப்பினர், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டபோது ஒதுக்கீடு செய்த எண் கொண்ட, ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என, சின்னயன் தரப்பினர் வலியுறுத்தினர். அதன்பேரில் அவசரமாக, புதிய ஓட்டுச் சீட்டு பயன்படுத்தி பகல், 12:00 மணிக்கு தேர்தல் நடத்தப்படும் என, அதிகாரிகள் கூறினர். அதனை அனைவரும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதிகாரிகள் திடீரென நிர்வாக காரணமாக, தேர்தலை, 27ம் தேதிக்கு, ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இதனால், ஓட்டுப்போட வந்த சங்க உறுப்பினர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மீனவர் படுகொலைகள் சில கசப்பான உண்மைகள் : டி.அருள் எழிலன்

கடந்த முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இலங்கை கடற்படையினர் மீது சுமத்தப்படுகிறது. நீண்டகாலமாக தமிழகத்தின் மீனவர் பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் இன்று தவிர்க்க முடியாமலோ, அல்லது தேவை கருதியோ இது குறித்து அவ்வப்போது தவணை முறையில் பேசுகிறார்கள்.
கடந்த முப்பதாண்டுகளாக இலங்கை தீவிற்குள் நடந்து வந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை அரசுப் படைகள் வன்னி மீதான போரை இரண்டரை ஆண்டுகாலம் நடத்தி துயரமான மக்கள் படுகொலையோடு போரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். போர் மனிதர்களை இடம்பெயரவும், ஊனமாக்கவும், காணாமல் போகவும், கடத்திச் செல்லவும், உயிரைப் பறிக்கவும் செய்கிறது என்பதற்கு ஈழ மக்கள் மட்டுமல்ல தமிழக கரையோர மீனவர்களும் ஒரு எடுத்துக்காட்டு. உள்நாட்டில் அல்ல அண்டை நாட்டில் நடக்கும் யுத்தம் கூட அதன் எல்லையை அண்டிய மக்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு பாம்பன் பகுதி மீனவர்கள் கடந்த முப்பதாண்டுகளாக படும் துன்பமே சாட்சி. இப்போதோ ‘போர் முடிந்து விட்டது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். கடற்புலிகள் இல்லை’, என இலங்கை அரசு போரின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.
இந்தப் போரின் துவக்கத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை மரியா என்ற படகில் வந்த சிலர் சுட்டுக் கொன்றார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் என்றது இந்திய அரசு. எனக்கு அப்போது நேர்காணல் ஒன்றை வழங்கிய அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவருமான சுப. தமிழ்செல்வன் இதை மறுத்தார். ஆனாலும் போரின் நியாயங்களும் அது நமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளாலும் நாம் சம்பவங்களை கடந்து சென்று விட்டோம். ஒரு வழியாக துயரமான முறையில் முள்ளிவாய்க்காலில் அது முடிவுக்கு வந்தது மே மாதத்தில். ஆனாம் அந்த மே மாதத்திற்குப் பிறகு மட்டும் தமிழக மீனவர்கள் இருபது தடவைக்கும் மேலாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் மீனவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிப் போய்விட்டது.
தங்கள் மீதான தாக்குதலை தட்டிக் கேட்காத, தங்களை பாதுகாக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பாம்பன் பகுதியின் ஐந்து மாவட்ட மீனவர்கள் கடந்த 22 நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர். தமிழக மீனவளத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து அவர்கள் கடந்த (12-09-2009) அன்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற அன்றே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்கள் கையாலாகதவர்களாய் கரை திரும்பினார்கள். அதே வாரத்தில் 21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டது இலங்கை கடற்படை. இந்தக் கட்டுரை எழுதப்படுகிற இன்று (24-09-2009 வியாழக்கிழமை) அவர்கள் விடுதலையாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக போர் முடிந்தாலும் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை என்பதை இலங்கை கடற்படை நமக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவது போலவே இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக, ஆந்திர போலிசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்கள் இப்போதும் நமது புழல் சிறையில் அடைபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இந்த எல்லை தாண்டும் கடல் விவாகரம் என்பது இரு நாட்டு மீனவர்களையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.
இந்திய அரசின் அணுகுமுறை?
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு தீர்வாக, சர்வதேச கடல் எல்லையைக் கடந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இந்தியக் கடற்டையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மீன்பிடி அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டிருப்பதோடு, எல்லை தாண்டும் மீனவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுக மிரட்டலையும் விடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் மத்திய அரசு தமிழக மீனவர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர்களாகவே சித்தரித்து வந்திருக்கிறது. ஒரு முறை கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரிக்கிற தொனியில் இப்படிச் சொன்னார், ”எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. தமிழகத் தலைவர் ஒருவர் கூட ‘அதிக பொருளுக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’ என்கிற தொனியில் சொன்னார். இப்போது நடந்திருந்க்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்திடம் கேட்டபோது, ‘மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார்.
மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாக கண்டித்திருக்கிறார்களா? பாதிக்கப்படுகிற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கும் இவர்கள், இந்த உயிர்வாழ்வு பிரச்சனையை ஒரு அடையாள அட்டைப் பிரச்சனையாகவோ, எல்லைப் பிரச்சனையாகவோதான் அணுகி வருகிறார்கள். ஆனால் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் உயிர்வாழ்தலின் பொருளாதார நலனை தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம். கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும். இந்திய சாதீய சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தும், திராவிட இயக்க அரசியலில் கோலோச்சும் சாதி ஆதிக்க அரசியல் சூழலில் அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள இம்மக்களின் அரசியல் விடுதலை குறித்தும் பேசுவதுமே பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
கச்சத்தீவு ஆதி முதல் இன்று வரை
இலங்கையில் பிரிட்டீஷார் பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு வட தமிழகத்திலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் கூலி அடிமைகளை கொண்டு சென்ற 19, 20 நூற்றாண்டுகளிலேயே பாக் நீரிணையை அண்டிய கச்சத்தீவு இந்தியா வழியாக இலங்கைக்கு செல்லும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னரும் வரலாற்றுக் காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பிரிட்டீஷார் அக்கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து திரும்பிய பின் குடிவரவு, குடியகல்வு சட்டக் கோவைகள் அமலுக்கு வந்த பின்னரும் கூட நீண்ட நெடுங்காலமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதையாக பாக் நீரிணையும் கச்சத்தீவும் இருந்துள்ளது. கலவரக் காலங்களில் மக்கள் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வரவும், அரசியல் செல்வாக்குள்ள கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வழியாகவும் இது இருந்து வந்துள்ளது. 1983 ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து ஈழப் போராளிகள் இந்திய அரசின் ஆதரவைப் பெற்று இந்தியாவுக்கு வரவும், அகதிகள் தமிழகத்துக்கு வரவும், இங்குள்ள வியாபாரிகள் பண்டமாற்று வணிகத்திற்காக சென்றும் வந்துள்ளனர். பொதுவாக இலங்கை மேட்டுக் குடி சமூகங்கள் இவர்களை கள்ளத்தோணிகள் என்று அழைக்கிறார்கள்
இக்காலத்தில் வேகம் பெற்ற ஈழத் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமும் அது தமிழகத்து மக்கள் மத்தியில் பெற்றிருந்த ஆதரவும், இந்திய மத்திய அரசு அதற்கு ஆதரவு அளித்த நிலையில் ஈழ கப்பல்
குமுதினி படகுத்துறை
போக்குவரத்துக்கழகம் என்கிற அங்கீகாரமில்லாத ஒரு சேவையைக் கூட அங்குள்ளவர்கள் நடத்தியதாகத் தெரிகிறது. போராளிகளை பயிற்சிக்கு அழைத்து வருவது, பயிற்சி முடிந்தவர்களை கொண்டு அங்கு விடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக போராளிகளுக்கு இந்த பாக் நீரிணை பயன்பட இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு வலையமாக கச்சத்தீவும் அதைத் அண்டிய பாக்நீரிணையும் இருப்பதாகக் கருதிய இலங்கை அரசு, 1985 ஆம் ஆண்டு இப்பகுதியில் மீன் பிடிக்கவோ, அங்கீகாரமில்லாமல் நடமாடவோ தடை விதித்ததோடு தடை செய்யப்பட்ட ஒரு பகுதியாகவே கச்சத்தீவையும் அதன் அண்டைப் பகுதியையும் இன்று வரை நடத்தி வருகிறது.
மனிதர்கள் வாழாத – தொழில் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் தீவுகளாக கச்சத்தீவு மட்டும் இல்லை. பாலைத்தீவு, கக்கிரத்தீவு என இன்னும் இரண்டு தீவுகள் கூட யாழ்குடா நாட்டில் இருக்கிறது. கேந்திர முக்கியத்துவம் இருந்தாலும் முழுக்க முழுக்க இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இத்தீவுகளை இலங்கை மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இவ்விதமாய் மனிதர்கள் வாழ்ந்தும், வாழாமலுமாய் 11 தீவுகள் யாழ்குடா நாட்டை அண்டிய பகுதியில் உள்ளதாம். ஆனால் இந்திய தமிழக மீனவர்களுக்கோ உபயோகப்படும்படியாய் இருப்பது கச்சத்தீவு மட்டும்தான். கச்சத்தீவு என்னும் மனிதர் வசிப்பிடமல்லாத அப்பிரதேசத்தை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளவும், மீன்களை வெட்டி உப்புக் கண்டமிட்டு கருவாடாக்கி கொண்டு வருவதற்கும், தற்காலிக இளைப்பாறுதலுக்கும், சங்கு, கடலட்டை போன்றவற்றை பிடிக்கும் ஒரு நிலமாகவும் தற்காலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னர் கச்சத்தீவு மேய்ச்சல் நிலமாகவும், யுத்தக் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் கூட இருந்ததுண்டு. இரண்டாம் உலகப் போரின் போது கச்சத்தீவில் நேசப் படைகள் பீரங்கித் தளம் ஒன்றை அமைத்திருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் பயன்படும் பவளப்பாறைகள் நிறைந்த இப்பிராந்தியத்தின் கடல் சூழல் மிக ஆரோக்கியமான ஒன்றாக நிலவுவதாலும் அதிக விலை கிடைக்கும் இறால் கணவாய் போன்ற மீன்வகைகள் மிக அதிக அளவில் கிடைப்பதாலும் மீனவர்களின் பொருளாதாரத் தேடலுக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் இப்பகுதி மிக முக்கிய தவிர்க்க முடியாத மீன் பிடி வலையமாக இருந்து வருகிறது.
தமிழகத்தின் இராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிவிட்ட கச்சத்தீவு தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் ஈழ, இலங்கை, இந்திய மீனவர்களை வரலாற்று ரீதியாகவும் பிணைத்திருக்கிறது. கச்சத்தீவில் 1913 ஆம் ஆண்டு புனித அந்தோணியாரின் ஆலயம் ஒன்று நிறுவப்பட்டது. பொதுவாக கடற்கரையோர சமூகங்களிடம் பனிமய மாதா, ஜெபமாலை மாதா, அலங்கார மாதா, அற்புத மாதா என பெண் தெய்வ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது போல புனித அந்தோணியார் வழிபாடும் பிரசித்தி பெற்றதுதான். கிறிஸ்தவத்தின் ஏனைய புனிதர்களை விட அந்தோணியார் மீனவர்களிடையே அதிக செல்வாக்கோடு விளங்குகிறார். பாஸ்கா பண்டிகைக் காலத்தில் வரும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இராமநாதபுரம் தங்கச்சி மடத்திலிருந்து பங்குப்பாதிரியாரும் அனைத்து மத மக்களும் வருடம்தோறும் சென்று சிறப்பு வழிபாடு செய்து திரும்புகின்றனர். இதற்கான உரிமை பாரம்பரியமாக தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கச்சத்தீவிற்குள் இருக்கும் அந்தோணியார் கோவில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவு பங்கின் கிளைப்பங்காக இன்றும் இருக்கிறது. அந்த வகையில் அக்கோவிலுக்கு முழுப் பொறுப்பும் நெடுந்தீவு பங்கையே சாரும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்ற தர்க்கத்தின் போது இதை ஒரு சான்றாக இந்தியாவிடம் வைத்து வாதிட்டு வந்தது இலங்கை அரசு.
கச்சத்தீவு சர்ச்சைகள்
கச்சத்தீவிற்கு உரிமையாளர் யார் என்கிற சர்ச்சை 1921-லேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் துவங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் ஒர் எல்லையை வகுப்பதற்கான மகாநாடு ஒன்று கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை குடியேற்ற நாட்டு அரசுகளிடையே 1921 அக்டோபரில் நடைபெற்றது. இரு தரப்புமே ஒரு முடிவுக்கு வரமுடியாத காரணத்தால் 1921ல் செய்து கொண்ட ஒப்பந்தம் மிகவும் பலவீனமான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. இலங்கையும் இந்தியாவும் சுதந்திரமடைந்து 1974 ஆம் ஆண்டில் இன்னொரு உடன்படிக்கை செய்து கொள்ளும்வரை கச்சதீவு தொடர்பான விவகாரம் தொடர்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை அரசால் பீரங்கித் தளமாக கச்சத்தீவு பயன்படுத்தப்பட்ட போது, 1949இல் இந்தியா தனது கடற்படைப் பயிற்சியை இத்தீவில் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. இப்பயிற்சிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த இலங்கை இவ்வாறான ஒரு கடிதத்தை இந்திய அரசிற்கு அனுப்பியது. ”கச்சத்தீவானது இலங்கைக்குரிய பகுதியென்றும் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இலங்கையிடம் அனுமதி பெறவேண்டுமெனவும்” இலங்கை கூற அது முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. பிரிட்டீஷ் இராணுவத்தின் வலுவான தளமாக இலங்கை மாற்றப்பட்டு அது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக மாறியிருந்த காலத்தில் இந்தியா வலுவான முறையில் இலங்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் போக்கு என்பது தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைப்பதாக இருந்தது.
கச்சத்தீவு தொடர்பான பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுந்த போது நேரு, இப்பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் என்னிடம் இல்லை என்றும் இது தொடர்பாக சென்னை அரசிடம் விபரம் கோரி இருப்பதாகவும் கூறினார். இந்த சின்னஞ்சிறிய தீவு குறித்து இரு அரசுகளும் தமக்கிடையில் மோதிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பாக எமது அண்டை நாடான இலங்கையுடன் இது குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை எனவும் உதாசீனமான பதிலைத் தெரிவித்தார். தமிழக மீனவர் நலன் குறித்து அக்கறையற்ற இந்திய அரசின் தடித்தனமான அணுகுமுறையின் ஆரம்ப வார்த்தைகள் இப்படித்தான் துவங்கின. அன்றைய நிலையில் இந்தியா இந்து மகாசமுத்திரத்தின் இந்திய நலன்கள் குறித்த அக்கறைகளைக் கொண்டிருக்கவில்லை. இந்திராவின் ஆட்சிக்காலத்திலேயே அவர் இந்து மகாசமுத்திரத்தில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஊடுறுவது குறித்து அக்கறை கொண்டிருந்ததெல்லாம் இப் படலத்தின் இன்னொரு கிளைக்கதை. நேரு காலத்தில் காட்டப்படாத அக்கறை இந்திரா காலத்தில் காட்டப்பட்டது. ஆனால் அது என்ன மாதிரியான அக்கறை?
இந்தியா கச்சத்தீவு தங்களுக்கானது என்பதற்கான ஆதாரமாக சில கடந்த கால வரலாறுகளை முன்வைத்தது. அதாவது சென்னை அரசின் கீழ் உள்ள மதுரை மாநிலத்தின் ஜமீன்தாராக இருந்தவர் ராஜா. 1947ம் ஆண்டு வரை கச்சதீவானது இவரது அதிகார எல்லைக்குட்பட்டிருந்தது. இக்காலத்தில் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதும் கன்னியாகுமரியைச் சார்ந்த பத்துதீவுகள் (கச்சதீவு உள்ளிட்ட) இவரின் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டு சென்னை அரசிற்கு உட்படுத்தப்பட்டது. கன்னியாகுமரித் தீவுகளில் இவரது ஆதிக்கம் படிந்திருந்தமையால் ராஜாவைச் “சேதுபதி” என்றும் “முனையின் பிரபு” என்றும் அழைத்தனர். 1822 முதல் ராஜா இத்தீவை முத்துக்குளிப்பவர் இறங்குதுறையாக பயன்படுத்தினார். கிழக்கிந்தியக் கம்பெனி இவ்வுரிமையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டது. ஆயினும் “ஈஸ்தி மீரர் சனாட்” என்ற உடன்படிக்கையின்படி கச்சதீவு ராஜாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசமாக பிரித்தானிய அரசு அங்கீகரித்தது. இறைமை உள்ளவர் என்ற வகையில் ராஜாவே பல நிர்வாகப் பணிகளை நிறைவேற்றி வந்தார்.
பல மன்னர்களின் கைகளுக்கு மாறி, செல்வந்த வணிகர்களின் கைகளுக்கும் மாறிய இத்தீவு கடைசியில் இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையின் கீழ் இருந்ததாகவும். அவர் சென்னை மாகாணத்திற்கு கப்பம் கட்டி வந்ததாகவும் இந்தியா தெரிவித்தது. கச்சத்தீவு எப்போதும் இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்பதை நிறுவ இந்தியா பல்வேறு வரி ஆவணங்களை முன் வைத்தது. இலங்கை அரசோ 15-ஆம் நூற்றாண்டின் வரைபடம் ஒன்றைக் காட்டி போர்த்துக்கீசியரின் ஆளுகையின் கீழ் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், இராமநாதபுரம் மகாராஜா யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு கப்பம் கட்டியதாகவும் சான்றாதாரங்களில்லாத ஒரு வாதத்தை முன்வைக்க வரைபடத்தின் அடிப்படையிலான இவ்வாதத்தை இந்தியா நிராகரித்தது. இழுபறியாக நீடித்த கால நீட்சிக்குப் பிறகு 1974 ஜனவரியில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது பாக் நீரிணை எல்லை தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருநாடுகளுக்கும் இருந்து வந்த கச்சத்தீவு விவகாரம் தணிந்துபோயிற்று அல்லது மக்கள் மன்றத்தில் கவனத்திற்கு வந்தது.
1974ன் இந்தியா இலங்கை கச்சத்தீவு ஓப்பந்தம்
இந்திய பிரதமர் இந்திராவுக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தியதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டதோடு, இவ்வுடன்படிக்கையில் உள்ள 5வது, 6வது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது.
சரத்து – 5
“மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெறவேண்டுமென தேவைப்படுத்தமுடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது”
சரத்து – 6
“இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்”
இந்த ஒப்பந்தம் இலங்கைத் தரப்பினருக்கு மகிழ்ச்சியை வழங்கிய அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்ப்புகளைக் கிளறி விட்டது. இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர். லோக் சபாவில் அறிக்கை கிழித்தெறியப்பட்டது. அதிமுகவின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ”தேசப் பற்றற்றவர்களின் நாகரீகமற்ற செயல் இது” எனக் கண்டித்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியனோ ”இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று” என்றார். தமிழக சட்டமன்றத்திலும் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தியதே தவிர கச்சத்தீவின் மீதான உரிமை பறிபோனதை திராவிடக் கட்சிகள் மக்கள் போராட்டமாக மாற்றவில்லை. தேர்தல் கூட்டணி, மத்திய அரசின் தயவு, பதவி அரசியல் என்கிற பல்வேறு பலவீனங்கள் காரணமாக இப்பிரச்சனை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லப்படவில்லை.
இந்து மகாசமுத்திரத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறலும், இந்தியாவைச் சூழ நிலவும் பதட்டமும் இந்தியாவை இலங்கையோடு நட்பாக நடந்து கொள்ளத் தூண்டியது. இந்து மகாச்சமுத்திரம் வழியாக இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார் இந்திராகாந்தி. இந்தியாவின் பிராந்திய தேசிய நலன்களுக்கு உகந்தது என்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் அம்மையார். ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் கடலின் மீதான தங்களின் உரிமையை இழந்தது குறித்தோ உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக கச்சத்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மாறிவிட்டது குறித்தோ இந்திய அரசு அன்றும் கவலைப்படவில்லை இன்றும் கவலைப்படவில்லை. மாறாக ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும் போதும் அதை ஒரு எல்லை தாண்டும் பிரச்சனையாக மட்டுமே திரித்துக் கூறிவருகிறது. ஆனால் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ம் ஷரத்து இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன்பிடிக்கவும் வந்து செல்லவும் உரிமை வழங்கியுள்ளது குறித்து இந்தியா மௌனம் சாதிக்கிறது.
இந்நிலையில்தான் 1983 ஜூலைக் கலவரங்களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டம் துளிர்த்த பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு தேசிய கடல் பாதுகாப்பும் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டது. எண்பதுகளுக்குப் பிந்தைய இக்காலக்கட்டத்திலிருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இது பெரும்பாதகமான ஒரு பகுதியாக மாறிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியளிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது, நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது, கடைசியில் சுட்டுக் கொல்வது என்று தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இலங்கை கடற்படையினரின் இதே கொடுஞ்செயலுக்கு ஈழத் தமிழ் மீனவர்களும் அப்பாவி பொது மக்களும் கூட தப்பியதில்லை. 1985 ஆம் ஆண்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குமுதினி படகில் புங்குடுத்தீவு நோக்கிச் சென்ற அப்பாவி ஈழத் தமிழர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்தார்கள். கடத்தல், காணாமல் போதல் என எல்லா வழமையான யுத்த தந்திர பாணிகளையும் இலங்கை கடற்படை ஈழத் தமிழர்களிடம் செய்தது போலவே தமிழக மீனவர்களிடையேயும் செய்து வந்தது. படிப்படியாக அதிகரித்துச் சென்ற இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொண்ணூறுகளில் அதிகரித்துச் சென்றது. ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். 1993ல் மட்டும் தமிழக மீன்வளத்துறையின் குறிப்புப்படி 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என எண்ணிக்கை எடுத்தால் அது நானூறைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமான ஊனத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையோ இதைப் போல பல மடங்கு அதிகம்.
எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட கடற்கரைச் சமூகம்?
கடலும் கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. உலகமயமாக்கலின் பின்விளைவுகளாய் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்புரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சு திணறிச் சாவது போல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நசுங்கி நாசமாகிறது. பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்கள் வங்காள விரிகுடாவையும், அரபிக்கடலையும் அண்டி வாழ்கிறார்கள். புவியியல் ரீதியாக ஒரமாக ஒடுக்கப்பட்டு சமவெளிச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் தமிழக அரசியலில் தீர்க்கமான சக்திகளாகவோ செல்வாக்கு செலுத்தும் சக்திகளாகவோ வளரவில்லை. வளர அனுமதிக்கப்பட்டதும் இல்லை.
பழவேற்காடு, சென்னை, மாமல்லபுரம், கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என இந்துக் கதையாடலில் புனிதத் தல ஒளிவட்டங்கள் இவ்வூர்களுக்கு இருந்தாலும் கூட இந்த நகரங்களின் பூர்வகுடிகள் மீனவப் பழங்குடிகளே. சென்னையின் வயது 300 என்கிறார்கள். அப்படியானால் அதற்கு முன் சென்னைக்கு வரலாறே கிடையாதா? பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன? உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வருவதற்கு முன்னால் சென்னை ஒரு மீனவ கிராமம். காலமாற்றத்தில் அது செயற்கைத் துறைமுக நகரமாக மாறிப் போனதோடு. வலைகள் காய்வதாலும், மீன்கள் கருவாடாக மாறுவதாலும் மெரீனாவின் அழகு கெடுகிறது என்று மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வரலாறுகள் கூட உண்டு. எழில் மிகு சென்னையின் அழகிற்குப் பின்னால் இரத்தம் தோய்ந்த மீனவர்களின் அழுகுரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழ்கிற மீனவ மக்களில் காரையார், பர்வதரஜகுலம், பட்டினத்தார், பரதவர், முக்குவர் என பாரம்பரியமாக கடலை நம்பி வாழ்கிற மீனவர்கள் அதிகமாக உள்ளனர். சென்னைக்கு வந்த பண்ணைகள் எப்படி மீனவர்களை அப்புறப்படுத்தி சென்னையை அழகுபடுத்திக் கொண்டார்களோ அது போலவே, இராமேஸ்வரமும் பாரம்பரிய மீனவர்கள் துரத்தப்பட்ட ஒரு தீவாக மாறிவிட்டது. அங்கே இன்று செல்வாக்கு செலுத்துகிறவர்கள் முக்குலத்தோர். இராமநாதஸ்வாமி கோவிலை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துப் பாசிஸ்டுகள் இவ்வூர்களில் செல்வாக்கு செலுத்துவதும் அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதும் இதே முக்குலத்தோர்தான். அது போல பாரம்பரிய மீனவர்களின் செழிப்பான நகரமாக இருந்தது தூத்துக்குடி. இன்றைக்கு மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து பீஸ் பிடுங்கி வீசி எரிந்து விட்டு தூத்துக்குடி நகரமே தங்களுக்கானது என்று அதிகார பலத்தோடு அமர்ந்திருப்பது நாடார்கள். கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம், பகவதியம்மன் கோவிலை மையமிட்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்துப் பாசிசம், திருச்செந்தூரில் முருகன் கோவிலை முன்வைத்து உள்ளது. இந்த அமைப்புகளின் அடியாட்களாக செயல்படுவதும் இதே பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான். இந்தப் பகுதிகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளை அண்டியே பாரம்பரிய மீனவர்கள் வாழ வேண்டிய நிலை. தவிரவும் தமிழகத்தில் கடற்கரையோர சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த சாதி செல்வாக்கானதோ பெரும்பான்மையானதோ அந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி வருகின்றன
திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏனைய தேசியக் கட்சிகளும். சமவெளிச் சமூகங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டு மட்டும் போடும் வாக்குப் பிண்டங்களாக மட்டுமே மீனவ மக்கள் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அரசியலில் சமவெளிச் சமூகங்களின் பிரதிநிதிகளே மீனவ மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் விசைப்படகு உரிமையாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தென் தமிழக கடலோரங்கள் மட்டுமல்லாது கடற்கரை சமூகங்களில் செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவம் கூட இம்மக்களை இன்று வரை காயடித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்குப் பாதிரியார்கள் தேவாலயங்களில் குறிப்பிட்ட ஒரு திராவிடக் கட்சியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே தேவாலயப் பூஜையில் ஓட்டு கேட்கிறார்கள். இந்தியத் திருச்சபை இந்துத் தன்மையாக மாறி காலங்கள் ஓடி விட்டாலும் உள்ளூரில் மீனவ மக்களை நசுக்குவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி பாதிரியார்களே. மறைமவாட்டங்களில் மீனவ மக்களின் பங்களிப்புக்கும் வாய்ப்புகளுக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி பாதிரிகள் எதிராக இருக்கிறார்கள். தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மீனவப் பாதிரிகள் விழிப்புணர்வடைந்து மறைமாவட்ட தலைமைகளில் உரிமைகள் கோரும் போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி திருச்சபை கோட்டாறு மறைவாட்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் நிர்வாக முடிவை எடுத்திருக்கிறது. பாதிரியார்களுக்கே இதுதான் நிலை என்றால் உழைக்கும் மீனவ மக்களின் நிலையை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிகளும், ஆதிக்க சாதிகளுமே கோலோச்சும் தேசிய இயக்க, திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தில் மீனவர்கள் அரசியல் சக்திகளாக பலம் பெறாமல் போனதும் சமவெளிச் சமூகங்களில் இருந்து கடற்கரை மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சுரண்டல் பேர்வழிகள் மீனவர்களின் உரிமை குறித்துப் பேசுவதுமே இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை ஒரு பெரிய அளவிலான மீனவர் பிரச்சனையாக வெடிக்காமல் போனதற்குக் காரணம். மீனவர் உரிமை பற்றிப் பேசுகிற இவர்கள் உண்மையான மீனவ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் அறியாதவர்களாக இல்லை. மாறாக காலங்காலமாக கடலில் இருந்து கொண்டு வரும் மீனுக்கு கரையில் இருந்தபடியே விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் கொழுத்த லாபம் பார்த்தவர்கள் இவர்கள். இன்றுவரை உடலுழைப்பில் ஈடுபடாமல் கரையில் அமர்ந்தபடியே உழைப்பைச் சுரண்டி வரும் இவர்கள் மீனவர் உரிமை தொடர்பாக பேசுவது எவ்வளவு அபத்தம்! சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தபோது, ஒரு பக்கம் சேதுக் கால்வாய் திட்டம் வந்தால் தமிழன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தபடியே உண்டு வாழலாம் என்றும் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என்றும் பேசிய மரபார்ந்த தமிழ்க் குரல் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராமன் பாலத்தை இடித்தால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கூச்சலிட்ட இந்துப் பாசிசக் குரல் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குமிடையே மீனவர் நோக்கில் அவர்களது மரபார்ந்த மீன் பிடித் தொழிலில் இந்த சேதுக்கால்வாய் திட்டம் ஏற்படுத்தப் போகும் நாசகார அழிவு குறித்தோ, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பவளப்பறைகள் குறித்தோ ஏன் எந்த சக்திகளும் பேசவில்லையோ, அது போலத்தான் தற்போதைய மீனவர் பிரச்சனையும்.
இலங்கை கடற்படையால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே எண்ணிக்கையில் இன்னொரு ஆதிக்க சாதியில் கொலைகள் விழுந்திருக்கும் என்றால் அதை திராவிட மனமோ, தமிழ்த் தேசிய மனமோ பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது இங்கு ஆராயப்பட வேண்டியது.
பொதுவாக மீனவச் சமூகத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் குடிப்பழக்கமே காரணம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மீனவர்கள் தொழில் சார் வாழ்வைக் கொண்டிருப்பதால் நிரந்தரமான குடிகாரர்களாக இயல்பாகவே வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவர்கள் கடலில் இருந்து அந்நியப்பட நேரிடும். மாறாக கள்ளுண்ணும் பழக்கமென்பது மீனவக் குடிகளிடம் சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்துள்ளது. மீனவ மக்கள் குடியால் சீரழிந்தவர்கள் என்கிற சிந்தனையை உருவாக்கியதும் கிறிஸ்தவம்தான். பின்னர் சுரண்டல் நலனுக்காகவும் அதைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகவும் இச்சிந்தனை சமவெளி சமூக ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்பட்டது. இப்படிப் பேசுகிற ஒருவர் கூட குடி இல்லாமல் இருந்தால் மட்டும் மீனவன் வாழ்வு மேம்பட்டிருக்குமா என்றோ இலங்கை கடற்படை சுடாமல் விட்டிருப்பானா என்பதையோ கேட்கத் தவறுகின்றனர். நீடித்த சுரண்டல் அடக்குமுறைக்கு இத்தகைய வசைகளும் குற்றச்சாட்டுகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது சாத்தப்படுவது பொதுப்புத்திதான்.
கடற்கரை சமூகங்கள் மீதான இந்த ஒதுக்கல் முறைதான் தமிழகத்திலிருந்து மீனவர்களுக்கான அரசியல் அழுத்தம் ஒன்று உருவாகாமல் போகக் காரணமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இட ஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக ஏற்பாடுகளில் கூட இவர்கள் ஆதிக்க சாதி பிற்படுத்தப்பட்ட மக்களுடனேயே போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். நீண்டகாலமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. இத்தகைய புறச்சூழல்களைக் களைவதில் போதிய அக்கறை காட்டாததாலும் இடதுசாரி இயக்கங்கள் கூட இம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்களிடம் பணி செய்யாமல் இருப்பதும், கிறிஸ்தவம் இம்மக்களை தொடர்ந்து மூடுண்ட சமூகங்களாக வைத்து சுரண்டிக் கொண்டிருப்பதுமே அவர்களை தற்கொலையான ஒரு சமூகமாக வைத்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை பேசாதவரை, இது குறித்து சிந்திக்காதவரை, இலங்கைக் கடற்படையின் தூண்டிலில் சிக்கிய மீன்களாக இவர்கள் இரையாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீனவர்களுக்காக பேசுவதைப் போன்ற பாவனைக் கோஷங்களுக்கும் குறைவிருக்காது.
இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
கச்சதீவு – அன்றும் இன்றும், ஏ.எஸ்.ஆனந்தன்.
சேதுக்கால்வாய் திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும் – குமரன்தாஸ்.
ஆழிப்பேரிடருக்குப் பின் – தொகுப்பு. வரீதைய்யா
உள்ளிட்ட சில பிரதிகள்.
– டி.அருள் எழிலன்

மீனவர்கள் போராட்டம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இந்த தாக்குதல்கள் தொடரத்தான் செய்கின்றன. இதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் பிரச்னையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகளில் பயணித்து, மழையையும், புயலையும் பொருட்படுத்தாமல், மீன்களைப் பிடித்துக் கரைக்குத் திரும்பும் மீனவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டத்துடனேயே தொடங்குகிறது. நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்தாலும், ஒவ்வொரு முறை கடலுக்குள் செல்லும் போதும், இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல்களால் உயிரைக் கையில் வைத்துக் கொண்டே பயணிக்கின்றனர் மீனவர்கள். தொடரும் இது போன்ற தாக்குதல்களால், கடலோர மாவட்டங்களில் மீனவக்‌ குடும்பங்கள் பல நிலை குலைந்துள்ளன. இலவசங்களுக்குப் பதில், மானிய விலையில் வழங்கும் டீசல் விலையை குறைக்க வேண்டுமென்றும் மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

“கச்சத்தீவை மீட்க வேண்டும் “:மேலும், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் பாதுகாப்போடு கரைக்குத் திரும்ப கடலோரக் காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மீனவர்கள் கூறுகின்றனர். (இது ஒருபுறமிருக்க, இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல் இல்லாமல் மீன் பிடிக்க, கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து இந்தியா மீடக் வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

“அரசின் செயல்கள் பாராட்டிற்குரியன”:மீனவர்களின் நலனுக்காக அரசு எதையுமே செய்யவில்லை என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும், மீனவர் பிரச்னைகள் குறித்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.

“இரண்டு நாடுகளும் பேச்சு நடத்த வேண்டும் “: கச்சத்தீவை மீட்பது என்பது ஒரு பக்கம் என்றாலும், எல்லைப்பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

காணொளி: http://puthiyathalaimurai.tv/video-gallery?video=3746

உள்நாட்டு மீனவர் கூட்டுறவுசங்கத்தில் 6 இயக்குனர்கள் தேர்வு

:சேத்தியாத்தோப்பு உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் 6 இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.சேத்தியாத்தோப்பில் உள்ள எப்.சி.இ.19 சேத்தியாத்தோப்பு உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் 7 இயக்குனர் பதவிக்கான தேர்தல் சேத்தியாத்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது.தேர்தல் அலுவலர் சண்முகத்திடம் 7 இயக்குனர் பதவிகளுக்கு சீனிவாசன், அஞ்சுகம், பாலகிருஷ்ணன், மகாலிங்கம், செல்வராசு, வசந்த பூபதி ஆகிய 6 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களும் பரிசீலனையில் ஏற்கப்பட்டதை தொடர்ந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பெண் இயக்குனர் பதவிக்கான ஒரு இடம் காலியாக உள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்தியா மீது அறிவிக்கப்படாத போரை நடத்துவதைப் போல உள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்,

தமிழக காவல்துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இத்தகைய தாக்குதல் இல்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை.

இலங்கை மீனவர்கள் கூட இந்திய எல்லைக்குள் வரும் போது அவர்களை தாக்கியதாகவோ, துன்புறுத்தியதாகவோ எந்த புகாரும் இல்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது இந்தியா மீது அறிவிக்கப்படாத போரை நடத்துவதைப் போல உள்ளது.

2009ல், இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரில் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் தற்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த போருக்கு பின்புலமாக இருந்து நடத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ். அரசு.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். பாஜகவைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. பாஜகவும் பிரதமருக்கான தலைவரை நிலைநிறுத்தியிருக்கிறது.

அதனை மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் மத்தியில் பாஜக அமைக்கும் கூட்டணியை அடிப்படையாக வைத்து தமிழகத்திலும் கூட்டணி அமைக்கப்படும்.

இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். பாஜக சார்பில் இலங்கை தமிழர்களின் பிரச்னையை முன்னிறுத்தி மார்ச் 19 முதல் ஒரு வாரத்துக்கு பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.432267_125780487542792_100003325256624_116772_11914957_n

உள்நாட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து தேர்தல் : 20ம் தேதி நடக்கிறது

பருவதராஜ குல உள்நாட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பருவதராஜ குல உள்நாட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனு வினியோகம் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. பூர்த்தி செய்த வேட்பு மனுவை 10ம் தேதி முதல் 11ம் தேதி வரை, 2 கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 12ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. 13ம் தேதி முதல் 14ம் தேதி வரை மனுவை திரும்ப பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் 15ம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடப்படும். வாக்குப் பதிவு 20ம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எண் 55, முதல் தெரு, நாராயணசாமி தோட்டம், அங்காளம்மன் கோயில், ராஜா அண்ணாமலைபுரம் என்ற முகவரியில் நடைபெறும். 20ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாக்கு எண்ணிக்கையும், அன்று மாலை 6.30 மணிக்கு முடிவுகளும் அறிவிக்கப்படும். அன்று இரவு 8 மணிக்கு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.